Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் பூதத்தாழ்வார் அவதார தலத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு: தூய்மையாக பராமரிக்க உத்தரவு

மாமல்லபுரம், அக்.11: தினகரன் செய்தி எதிரொலியாக மாமல்லபுரம் பூதத்தாழ்வார் அவதார தலத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு, தூய்மையாக பராமரிக்க உத்தரவிட்டார். 12 ஆழ்வார்களில், ஒருவரான பூதத்தாழ்வார் வைணவ நெறியை பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கியவர். இவர், முதல் ஆழ்வார்கள் என போற்றப்படும் 3 ஆழ்வார்களில் 2வது ஆழ்வாராக சிறந்து விளங்கினார். வைணவ, நூல்களின் தொகுப்பான 4 ஆயிரம் திவ்ய பிரபந்தங்களில் உள்ள 2வது திருவந்தாதியை பாடியுள்ளார். இது, நூறு வெண்பாக்களால் ஆனது. இவர், 13 திவ்ய தேசங்களில் மங்களாசாசனம் செய்தது குறிப்பிடத்தக்கது. இவர், கடல் மல்லை என்னும் மாமல்லபுரத்தில் தலசயன பெருமாள் கோயிலுக்கு எதிரே மல்லிகை புதரின் நடுவில் குருக்கத்தி மலரில் ஐப்பசி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் அவதரித்தார்.

அவர், அவதரித்த தலத்தில் பெருமாளுக்கு பிடித்த செண்பகம், மல்லிகை, முல்லை, பாதுரி, கருமுகை, இருவாச்சி உள்ளிட்ட செடிகளை நடப்பட்டு நந்தவனம் அழகுர பரமாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு, ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் பூதத்தாழ்வாருக்கு 10 நாள் உற்சவம் நடத்தப்பட்டு, 9ம் நாள் தேரோட்டம் நடைபெறும். தற்போது, பூதத்தாழ்வார் அவதார தலம் தலசயன பெருமாள் கோயில் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, கடந்த செப்டம்பர் 12ம் ஒரு ஜோடி மேக்கப்போடும் பெண், கேமராமேன் ஆகியோரை அழைத்து வந்து திருமணத்துக்கு முந்தைய போட்டோ ஷூட் எடுத்தனர்.

இதுகுறித்து, கடந்த செப்டம்பர் 13ம் தேதி தினகரன் நாளிதழில படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் வந்து, பூதத்தாழ்வார் அவதார தலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும், போட்டோ ஷூட் எடுக்க அனுமதிக்க கூடாது எனவும் கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். முன்னதாக, குடும்பத்தோடு தலசயன பெருமாளை சாமி தரிசனம் செய்த, அமைச்சர் சேகர்பாபு தென்மாட வீதி வழியாக கோயிலுக்கு வரும் கேட்டை சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்கள் திறந்து வைக்க வேண்டும் என தலசயன பெருமாள் கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது, தலசயன பெருமாள் கோயில் செயல் அலுவலர் சிவக்குமார், ஆளவந்தார் அறக்கட்டளை செயல் அலுவலர் செல்வகுமார், தலசயன பெருமாள் கோயில் மேலாளர் சந்தானம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.