குன்னவாக்கம் கிராமத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு புதிய பேருந்து சேவை: எம்எல்ஏ சுந்தர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
மதுராந்தகம்,அக்.10: குன்னவாக்கம் கிராமத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு பேருந்து சேவையினை எம்எல்ஏ சுந்தர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குன்னவாக்கத்திலிருந்து காஞ்சிபுரத்திற்கு அரசு பேருந்து போக்குவரத்தினை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தரிடம் மனு அளித்திருந்தனர். இந்த மனுவின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரம் கோட்ட போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் போக்குவரத்து பணிமனை அலுவலக அதிகாரிகள் மனுவினை பரிசீலனை செய்து குன்னவாக்கத்திலிருந்து காஞ்சிபுரத்திற்கு பேருந்து போக்குவரத்தை ஏற்பாடு செய்து அந்தப் பேருந்து போக்குவரத்து தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு பேருந்து போக்குவரத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்து அப்பகுதி மக்களுடன் சிறிது தூரம் பயணம் செய்தார். இந்த பேருந்து போக்குவரத்து ஏற்பாடு செய்ததற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சிவராமன், கவுன்சிலர் நதியா கோபி, ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரமூர்த்தி, கிளைச் செயலாளர்கள் இளங்கோவன், யோகநாதன், பாலசுப்பிரமணியம், கெங்க பிள்ளை, வெங்கடேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.