Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் ரூ.3 கோடியில் மினி ஸ்டேடியம்: பணிகள் தொடங்கியது

ஆலந்தூர், டிச.9: பரங்கிமலை பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மினி ஸ்டேடியம் அமைக்கும் பணிகளை முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர், காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர். பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதிக்கு உட்பட்ட மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் ஒன்றேகால் ஏக்கர் பரப்பளவில், ரூ.3 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர், தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம், பணிகளை தொடங்கி வைத்தனர்.

இதையொட்டி, பரங்கிமலையில் நடந்த விழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் குத்து விளக்கேற்றி, பூமி பூஜையை தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, ஆலந்தூர் மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது: பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதியில் இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் இல்லாததால் சிரமப்பட்டு வந்தனர். எனவே, தங்களது பகுதிக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும், என கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக, முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அரசு நிதியில் இருந்து ரூ.2.5 கோடி மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் பரங்கிமலையில் மினி ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் கன்டோன்மென்ட் பகுதியிலிருந்து 1000 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. அவ்வாறு மீட்கப்பட்ட நிலங்களில் தோழி இல்லம், துணை மின் நிலையம், அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, ஒன்றேகால் ஏக்கர் பரப்பில் மினி ஸ்டேடியம் கட்டப்பட உள்ளது. கத்திபாரா மேம்பாலம் அருகிலேயே இரண்டரை ஏக்கர் பரப்பளவில் கலை மற்றும் அரசு கல்லூரி ரூ.18 கோடியில் கட்டப்பட உள்ளது. மேலும், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கான அடக்கஸ்தலம் கட்டுவதற்காக தலா 52 சென்ட் இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.80 கோடி மதிப்பில் ஹஜ் இல்லம் கட்டப்பட உள்ளது. ஆலந்தூர் மண்டல அலுவலகம் புதிதாக கட்டப்பட உள்ளது. இவ்வாறு தனியார் வசமிருந்த அரசு நிலங்கள் மீட்கப்பட்டு அரசுக்கு தேவையான அலுவலகம், விளையாட்டு மைதானம், கல்லூரி ஆகியவை கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.