காஞ்சிபுரத்தில் தேசிய கைத்தறி தின விழாவில் நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
காஞ்சிபுரம், ஆக.9: காஞ்சிபுரத்தில் கைத்தறி துறை சார்பில் நடைபெற்ற 11வது தேசிய கைத்தறி தின விழாவில், 323 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.148.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், கைத்தறி துறை சார்பில் 11வது தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு, நெசவாளர்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்று, நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார். இதனையடுத்து, நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினையும், கைத்தறி கண்காட்சியையும் பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து, 18 நெசவாளர்களுக்கு கவுரவ விருதுகளும், 1 நெசவாளருக்கு கருணை அடிப்படையில் வாரிசுதாரருக்கு பணி நியமனம் ஆணையும், 6 நெசவாளர்களுக்கு வாரிசுதாரருக்கு வீட்டு உரிமை பத்திரபதிவு மாற்றம், 24 நெசவாளர்களுக்கு சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.32.22 லட்சம் நலத்திட்ட உதவிகளும், 161 நெசவாளர்களுக்கு, நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.107.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளும், 25 நெசவாளர்களுக்கு முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், 8 நெசவாளர்களுக்கு குடும்ப ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், 80 நெசவாளர்களுக்கு கைத்தறி ஆதரவுத் திட்டத்தின் கீழ் ரூ.8.20 லட்சம் மதிப்பிலான கைத்தறி உபகரணங்கள் என மொத்தம் 323 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.148.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்தியா சுகுமார், கைத்தறி துறை துணை இயக்குநர் மணிமுத்து, முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உதவி இயக்குநர் சத்யபாமா முருகன், பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் முத்து செல்வம், காஞ்சிபுரம் கைத்தறி கட்டுப்பாட்டு அலுவலர் மோகன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டனர்.