Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வரத்து கால்வாய்கள் சீரமைக்காததால் சீரழியும் நிலையில் கோயில் குளங்கள்: பயனற்ற நிலையில் புதர் மண்டி கிடக்கிறது

காஞ்சிபுரம், அக்.8: வரத்து கால்வாய்கள் சீரமைக்காததால் சீரழியும் நிலையில் உள்ள கோயில் குளங்கள் பயனற்ற நிலையில் புதர் மண்டிக்கிடக்கிறது. ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்... கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது முதுமொழி. அத்தகைய கோயில்களுக்கு சிறப்பு சேர்ப்பவை கோயில் குளங்கள். ஏனெனில் குளத்திற்காக வெட்டி எடுக்கப்பட்ட மண்ணை வைத்து தான், அந்த கோயிலின் அஸ்திவாரம் மற்றும் சுவர்கள் பெரும்பாலும் கட்டப்பட்டிருக்கும். கோயிலின் சிலை, விக்ரகங்கள் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்தாலும், கோயில் கட்டப்பட வேண்டிய இடத்திற்கு அருகே தோண்டப்படும் குளத்தின் மண் மற்றும் குளத்து நீரை பயன்படுத்தி கடந்த காலங்களில் கோயில்கள் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே, கோயில் கட்டப் பயன்பட்ட அந்த குளத்திற்கு, பக்தர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். எனவேதான், ஸ்தல விருட்சத்தைப் போல ஸ்தல தீர்த்தமும் முக்கியத்துவம் பெறுகிறது. இறைவனைக் காண வரும் தேவர்களும், மூவர்களும் கூட முதலில் குளத்தில் இறங்கி தங்களை தூய்மைப்படுத்திக் கொண்ட பின்னர் தான், கோயிலுக்குள் சென்று இறைவனை சந்தித்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில் குளங்கள் காஞ்சிபுரத்தில் கவனிப்பார் இன்றி சீர்கெட்டு கிடப்பது பக்தர்களை வேதனை அடைய செய்துள்ளது. கோயில்களின் நகரமான காஞ்சிபுரம் நகரில் காமாட்சி அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், குமரகோட்டம் என சிறியதும், பெரியதுமாக சுமார் 1000க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன.

இந்த, கோயில்கள் பலவற்றில் குளங்களும் உள்ளன. அந்த குளங்களுக்கு மழைநீர் வரத்துக் கால்வாய்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குளங்கள் அப்பகுதியில் ஒரு மழைநீர் சேகரிப்பு அமைப்பாக செயல்பட்டு, பகுதி குடியிருப்புகளுக்கு நீராதாரமாகவும் விளங்கி வந்தன. இந்நிலையில், இந்த குளங்களின் வரத்துக் கால்வாய்கள் பராமரிப்பின்றி பலத்த மழை பெய்தாலும் வறண்ட நிலையிலேயே இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாக பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். மங்கள தீர்த்தம்: சங்கர மடம் எதிரில் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான மங்கள தீர்த்தம் உள்ளது. இந்த, குளத்திற்கும் வரத்துக் கால்வாய் சேதமடைந்து உள்ளதால், எப்போதும் வறண்டே காணப்படுகிறது. நகரில் உள்ள சர்வதீர்த்தகுளம், ரங்கசாமி குளம், பொய்யாகுளம், மங்களதீர்த்தம், வெள்ளைகுளம், ஒக்கபிறந்தான் குளம் என, நகரில் 25க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.

இக்குளங்கள் அனைத்தும், ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. வேகவதி ஆற்றிலிருந்து பிரிந்து வரும் லாலா கால்வாய் வழியே வரும் தண்ணீர், சர்வதீர்த்தகுளத்திற்கு வரும். அக்குளம் நிரம்பியதும், உபரி நீர், ஏகாம்பரநாதர் கோயில் குளத்திற்கும், மங்களதீர்த்தம் குளத்திற்கு செல்லும். அந்தக் குளங்கள் நிரம்பியதும், உபரி நீர் பொன்னேரி ஏரிக்கு செல்லும். அதேபோன்று, புத்தேரி கால்வாயிலிருந்து வரும் தண்ணீரில் வெள்ளகுளம், ஒக்கபிறந்தான் குளம் ஆகியவை நிரம்பும். மஞ்சள் நீர் கால்வாய் வழியே வரும் தண்ணீரில் ரங்கசாமி குளம் உட்பட பல குளங்கள் நிரம்பும். காலப்போக்கில், இந்தக் குளங்களுக்கு வரும் கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புகளால் தூர்ந்துவிட்டன. இதனால், எவ்வளவு மழை பெய்தாலும், குளங்களுக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால் நாளுக்குநாள் காஞ்சிபுரத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் அழகிய சிங்கபெருமாள் கோயில் குளம், பொய்கை ஆழ்வார் குளம் உள்ளிட்ட சில குளங்கள் தூர்வாரப்பட்டு அழகிய நிலையில் உள்ளது. ஆனாலும் வரத்துக் கால்வாய்கள் முழுமையாக இணைப்பு இல்லாததால், அப்பகுதியில் பெய்யும் மழைநீரை மட்டுமே நம்பி உள்ளது. எனவே, நகர வடிவமைப்புடன் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம் நகரில் உள்ள குளங்களுக்கு ஏற்கனவே உள்ள வரத்து கால்வாய்களை கண்டறிந்து சீரமைக்க வேண்டும். மேலும், இந்த நீர் வழித்தடத்தில் வீடுகளின் கழிவுநீர் கலக்காமல் இருப்பதையும் கண்காணிக்க வேண்டும். இதற்காக நீரியல் வல்லுநர்கள், அந்தந்த பகுதிகளை சேர்ந்த நகரின் முன்னோடிகள் ஆகியோர் கொண்ட குழு அமைத்து திட்டத்தை செயல்படுத்த அறநிலையத்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் ஆவன செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.