Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கழிவுநீரை வெளியேற்ற கிருஷ்ணா நதிநீர் கால்வாய் உடைப்பு செம்பரம்பாக்கம் ஏரிநீர் மாசடையும் அபாயம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பெரும்புதூர், அக்.8: பெரும்புதூர் அருகே குடியிருப்புகள், தனியார் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கிருஷ்ணா நதிநீர் கால்வாய் வழியாக வெளியேற்றப்படுவதால், செம்பரம்பாக்கம் ஏரிநீர் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பெரும்புதூர் அருகே தண்டலம் ஊராட்சியில் கிருஷ்ணா நதிநீர் கால்வாய் உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி நீர் தேக்கத்திலிருந்து திறக்கப்படும் நீர் கிருஷ்ணா நதி நீர் கால்வாய் வழியாக சுமார் 30 கிலோ மீட்டர் பயணித்து செம்பரம்பாக்கம் ஏரியில் நேரடியாக கலக்கும். தண்டலம் ஊராட்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் வெளியேற்றபடுகிறது. இதனால், சென்னை மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்குச்சென்று, ஏரிநீர் மாசடைந்து வருகிறது.

இதுகுறித்து, பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்த நிலையில், தண்டலம் பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் மண்ணை கொண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கரையை பலப்படுத்தினர். இந்நிலையில், அவ்வப்போது மழை பெய்து வருவதால், கழிவுநீருடன் மழைநீர் கலந்து வெளியேற முடியாமல் கால்வாய் முன்பு குட்டைபோல தேங்கி நிற்கிறது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த சமூக விரோதிகள் சிலர், கால்வாயை சேதப்படுத்தி, கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் கழிவுநீரை வெளியேற்றி வருகின்றனர். இதனால், செம்பரம்பாக்கம் ஏரிநீர் மாசடையும் சூழல் உருவாகியுள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கால்வாயை சேதப்படுத்தும் நபர்கள் மீது அதிகாரிகளும், காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.