விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னைக்கு திரும்பியதால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்: ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்ற வாகனங்கள் பயணிகள் கடும் அவதி
செங்கல்பட்டு, அக்.7: விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் பலரும் சென்னைக்கு திரும்பியதால் பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகள் என ஜிஎஸ்டி சாலையில் நேற்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், ஆமை வேகத்தில் ஊர்ந்தபடி வாகனங்கள் சென்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். காலாண்டு தேர்வு கடந்த மாதம் 10ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடந்தது. பின்னர் தேர்வு விடுமுறை விடப்பட்டது. இதேபோன்று ஆயுத பூஜை விடுமுறை காரணமாகவும் வார விடுமுறை காரணமாகவும் பலரும் சொந்த ஊர்களுக்கு சென்றனர். சென்னையில் வசிக்கும் திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, திருச்சி உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த பலரும், தங்களது குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றனர். குடும்பத்துடன் பண்டிகைகளை கொண்டாடினர்.
காலாண்டு தேர்வு விடுமுறை நேற்று முன்தினம் முடிவடைந்தது. நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. விடுமுறை எடுத்து சென்றவர்களும் நேற்று பணிக்கு திரும்புவதால் நேற்று முன்தினம் இரவில் இருந்து பலரும் கார்கள், பேருந்துகள், பைக்குகள் என வாகனங்களில் சென்னைக்கு திரும்ப தொடங்கினர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலரும் சென்னை திரும்பியதால் பெங்களத்தூர், தாம்பரம், வண்டலூர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதியில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. சுமார் 3 கிமீ வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சாலையே ஸ்தம்பித்தது. இதனால் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் நேற்று முன்தினம் இரவு சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்படாமல் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பரனூர் சுங்கச்சாவடிகளிலும் நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இதனால் சென்னை நோக்கி செல்லும் வழிதடத்தில் கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டது. மதுராந்தகம்-செங்கல்பட்டு இடையே 2 இடங்களில் நெடுஞ்சாலை துறை மூலம் பாலம் கட்டும் பணி நடைபெறுவதாலும், மாமண்டூர் பாலாற்று பாலம் குறுகியதாக உள்ளதாலும் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றது. இதனால் செங்கல்பட்டு பகுதிகளில் சுமார் 7 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. போக்குவரத்தை கட்டுப்படுத்த செங்கல்பட்டு மாவட்ட போலீசார், தாம்பரம் மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பேருந்துகள், ரயில்கள் என அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்ட நெரிசலை தவிர்க்க சிலர், சனிக்கிழமை அன்று இரவே சென்னை திரும்பியதையும் பார்க்க முடிந்தது. நேற்று அதிகாலையிலும் சென்னை நகரமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல் இருந்தது. சிங்கபெருமாள் கோயில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஆமை வேகத்தில் வந்தது. தேசிய நெடுஞ்சாலையில் நெரிசல் அதிகமாக இருந்ததால் பலர், செங்கல்பட்டு-தாம்பரம்-கடற்கரை மின்சார ரயில்களில் பயணம் செய்தனர்.