காஞ்சிபுரம், அக்.7: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், ஊராட்சி தலைவர்களுக்கான தனி குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், கூட்டமைப்பின் தலைவர் அஜய்குமார், செயலாளர் பொன்னா (எ) வெங்கடேசன் ஆகியோர், நேற்று காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் சந்தித்து, கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சிறப்பான முறையில் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும் தமிழக முதல்வருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அதே வேளையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 274 கிராம ஊராட்சிகளுக்கான உள்ளாட்சி பிரதிகள் குறை தீர்க்கும் கூட்டம் கடந்த ஓராண்டக நடைபெறவில்லை. இதனால், ஊராட்சி தலைவர்கள் கோரிக்கைகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சி தலைவர்களும் பயன்பெறும் வகையில், தனியாக ஒரு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்த ஆவணம் செய்யுமாறும், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.