Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2வது திருமணம் செய்ய முயன்றதால் வெறிச்செயல் தந்தை கழுத்தறுத்து கொடூர கொலை:  மகன் கைது  கூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு

கூடுவாஞ்சேரி, ஆக.7: கூடுவாஞ்சேரி அருகே பாண்டூரில் தந்தை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த, மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், தந்தை 2வது திருமணம் செய்ய முயன்றதால் வாலிபர் வெறிச்செயலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் நேற்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் பாண்டூர் கிராமம் உள்ளது. நேரு தெருவை சேர்ந்தவர் குபேந்திரன்(58). இவர் அப்பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை செய்து வந்தார். இதில், அவரது மனைவி கற்பகம் கடந்த 2020ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இதில் குபேந்திரனுக்கு தீபக்(30), கரன்(28), தனுஷ்(25) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

இதில் தீபக் என்ற மகனுக்கு திருமணமாகி அவரது மனைவியுடன் உள்ளார். கரணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடைசி மகன் தனுஷ் 12-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு டாடா ஸ்கை ஒய்பை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதில் மூன்று மகன்களுக்கும், தந்தைக்கும் சரிவர பேச்சுவார்த்தை இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குபேந்திரன் வேறொரு பெண்ணுடன் இருந்ததை தனுஷ் பார்த்துள்ளார். இதில் தனது தந்தை 2வது திருமணம் செய்ய முயன்றதால் ஆத்திரமடைந்த தனுஷ் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பாண்டூர் நேரு சந்திப்பில் தனது தந்தையை நேரில் சந்தித்து கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் முற்றியது. இதில் குபேந்திரன் தனது மகன் தனுஷை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனுஷ் அருகில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனையடுத்து தனுஷ் வீட்டில் இருந்து எடுத்து வந்த கத்தியால் மயங்கி விழுந்த குபேந்திரனின் கழுத்தை அறுத்தார். இதில் அலறல் சத்தம் கேட்டதும் அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். இதனை கண்டதும் தனுஷ் அங்கிருந்து தப்பி ஓடி வீட்டிற்குள் புகுந்துகொண்டார். இதில் குபேந்திரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீஸ் உதவி கமிஷனர் ராஜிவ்பிரின்ஸ்ஆரோன், இன்ஸ்பெக்டர் நெடுமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குபேந்திரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் பதுங்கி இருந்த தனுஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் நேற்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.