Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தங்க பல்லி, வெள்ளி பல்லி மாற்றப்படுவதாக புகார்: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை

காஞ்சிபுரம். நவ.6: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தங்க பல்லி, வெள்ளி பல்லி மாற்றப்படுவதாக புகார் எழுந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அத்திவரதர் கோவில், வரதராஜ பெருமாள் கோயில் என அழைக்கப்படும், தேவராஜ சுவாமி கோயிலில் உள்ள தங்க பல்லி, வெள்ளி பல்லி சிலைகளை தரிசனம் செய்ய நாள்தோறும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தங்க பல்லி, வெள்ளி பல்லி கோயில் என பிரசித்தி பெற்று விளங்கும் இக்கோயிலில் சூரியன், சந்திரன் உடன் இருக்கும் வெள்ளி பல்லி, தங்க பல்லி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கை பட்டு மிகவும் தேய்ந்து போன நிலையில் இருந்தது.

மேலும் பக்தர்கள் படிகளில் ஏறி பள்ளிகளை தொட்டு தரிசனம் செய்ய சிரமம் அடைந்தனர். இதன் காரணமாக பல்லி சிலைகள் இருந்த இடத்தில் புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பழைய பல்லி சிலைகள் தாழ்வான வகையில் அமைக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில் தங்க பல்லி, வெள்ளி பல்லி இருந்த பழைய இடம் புனரமைக்கப்பட்டதை தொடர்ந்து தங்க பல்லி, வெள்ளி பல்லி சிலைகளும் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் பழமையான தங்கம், வெள்ளி பல்லிகள் காணாமல் போய் உள்ளதாகவும், தற்போது நடைமுறையில் உள்ள பல்லி சிலைகளை கோவில் நிர்வாகம் மாற்ற முயற்சிக்கிறது என சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டிஎஸ்பி சம்பத் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் சோதனை மேற்கொண்டனர். கோயில் பட்டாச்சாரியார்கள் ஸ்தானியகர்கள், கோயில் மணியக்காரர், கோயிலின் நிர்வாக அறங்காவலரும், உதவி ஆணையருமான ராஜலட்சுமி உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கோவில் நிர்வாக அறங்காவலர் ராஜலட்சுமியிடம 13 கேள்விகள் கேட்டு பதிலைப் பெற்று பதிவு செய்தனர். மேலும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கினர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக கோயில் வளாகத்தில் தங்க பல்லி வெள்ளி பல்லி மாற்றும் விவகாரம் சம்பந்தமாக விசாரணை மேற்கொண்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.