குற்ற சம்பவங்களை தடுக்க செங்கல்பட்டு மாவட்டத்தில் 250 கேமராக்கள்: காவல் கட்டுப்பாட்டு அறையை எஸ்பி சாய் பிரினித் ஆய்வு
செங்கல்பட்டு, நவ.6: குற்ற சம்பவங்களை தடுக்க செங்கல்பட்டு மாவட்டத்தில் 250 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் கட்டுப்பாட்டு அறையை எஸ்பி சாய் பிரனித் ஆய்வு செய்தார். செங்கல்பட்டு காவல் எல்லைக்கு உட்பட்டு செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் ஆகிய டிஎஸ்பி அலுவலகமும் அதன் கீழ் சட்டம் ஒழுங்கு மதுவிலக்கு மகளிர் உள்பட 20 காவல் நிலையங்கள் உள்ளன. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலை என முக்கிய சாலைகளில் அவ்வப்போது சாலை விபத்துகள் நடைபெறுகிறது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. குறிப்பாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பரனூர் சுங்கச்சாவடி, ஆத்தூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் பொதுமக்கள் காவல் நிலையங்களில் புகார் கொடுக்கும் போது போலீசாருக்கும் பொது மக்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளை நேரடியாக கண்காணிக்கவும், விபத்து வாகனங்களை உடனடியாக கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் செங்கல்பட்டு எஸ்பி அலுவலகத்தில் காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. தற்போது மாவட்ட முழுவதும் காவல் நிலையங்கள் டிஎஸ்பி அலுவலகங்கள் டோல்கேட் முக்கிய சாலை சந்திப்புகள் என பல்வேறு இடங்களிலும் 250 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அந்த கேமராக்களை காவல் கட்டுப்பாட்டு அறையின் கீழ் கொண்டு வந்து கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி சாய் பிரனீத் கூறுகையில், குற்ற சம்பவங்களை தடுக்கவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் காவல் நிலையத்தில் நடக்கும் பொதுமக்கள் பிரச்னைகள் நேரடியாக கண்காணிக்கவும் முயற்சி எடுக்கப்பட்டு முதற்கட்டமாக 250 கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையின் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
இதன் மூலம் எந்தப் பகுதியில் என்ன பிரச்சனை நடக்கிறது என்பதை கட்டுப்பாட்டு அறையின் மூலம் எங்களுக்கு நேரடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட இடத்திற்கு உடனடியாக காவலர்களை அனுப்பி அதனை சரி செய்யப்படும். விபத்து வாகனங்கள் விபத்து ஏற்படுத்தி விட்டு தலைமறைவாகும்போது தற்போது உள்ள நவீன கேமராக்கள் மூலம் வாகனங்களின் நம்பர் பிளேட் முழுவதுமாக கண்காணிக்கப்பட்டு உடனடியாக அதனை பார்த்து கைது செய்து நடவடிக்கை எடுக்க விரைவாக இந்த கட்டுப்பாட்டு அறை நமக்கு உதவி செய்யும். செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் சில முக்கிய பகுதிகளில் கேமராக்கள் பொருத்தம் பணி நடைபெற்று வருகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள கேமராக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள காவல் நிலையங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு பின்பு அங்கிருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும். இதன் மூலம் உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு உடனுக்குடன் பிரச்னையை தீர்க்க இது முக்கிய உதவியாக இருக்கும், என்றார்.
