கூடுவாஞ்சேரி, டிச.5: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் அடங்கிய கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால், ஹவுசிங் போர்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் ஊராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு பகுதியில் உள்ள குடிநீர் கிணற்றில் ஓட்டை விழுந்துள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் கலங்கி விடுகிறது. இதனை குடிப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல், காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் புகார் கூறினர்.
இதுகுறித்து, நேரில் சென்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு செங்கல்பட்டு கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து, நேற்று காலை அங்கு விரைந்து வந்த நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் விநாயகபுரம், தொட்டி மாரியம்மன் கோவில் தெரு, ஊமை மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுவீடாகச் சென்று சுகாதாரமற்ற முறையில் வழங்கப்படும் குடிநீர் குறித்தும், டெங்கு கொசுக்கள் உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர். பின்னர், அனைத்து வீடுகளிலும் கொசு மருந்து அடித்தனர். இதனையடுத்து, விநாயகபுரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து, நேற்று மாலை அப்பகுதிக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது உடைந்த குடிநீர் குழாய்களை அகற்றிவிட்டு இரும்பு மூலம் குடிநீர் குழாய்களை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். அதற்கு குடிநீர் குழாய்கள் போட்டு தர முடியாது என்று வட்டார வளர்ச்சி அலுவலர் கராராக கூறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இரண்டு, மூன்று குடிநீர் குழாய்கள் வைத்துள்ளதை அகற்றிவிட்டு வீட்டிற்கு ஒரு குடிநீர் குழாய் அமைக்கவும், கால்வாய்களை தூர்வாரி, பிளீச்சிங் பவுடர் போட்டு கொசு மருந்து அடிக்கவும் ஊராட்சி செயலருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டார்.

