பெரும்புதூர், நவ.5: பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. பழமையான இக்கோயிலில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையன்றும் கிருத்திகை, சஷ்டியன்றும் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறுகின்றன. அந்த வகையில், ஐப்பசி மாத செவ்வாய்கிழமை முன்னிட்டு, நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் சந்நிதி திறக்கப்பட்டு கோ பூஜை செய்யப்பட்டது. பிறகு, சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். காலை 8 மணிக்கும், 11 மணிக்கும் மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு, சுப்பிரமணிய சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவர் வள்ளி - தெய்வானை, சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ரத்தனாங்கி சேவையில் காட்சியளித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மண்டல இணை ஆணையர் குமரதுரை அறிவுரைப்படி, கோயில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்தேவ்ராஜ், அறங்காவலர்கள் விஜயகுமார், கலைச்செல்வி கோபால், மோகனகிருஷ்ணன், செல்வகுமரன் ஆகியோர் செய்திருந்தனர்.
+
Advertisement
