துரைப்பாக்கம், டிச.2: நீலாங்கரை, கணேஷ் நகரை சேர்ந்தவர் பச்சையப்பன் (45). இவரும், கே.கே.நகரைச் சேர்ந்த வெற்றி என்பவரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுடன் வெற்றியின் நண்பர் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சங்கர் (40) என்பவரும் சேர்ந்து தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், நிலம் விற்று கொடுத்ததில் சங்கருக்கு பச்சையப்பன், வெற்றி ஆகியோர் கமிஷன் பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சங்கர் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து, நேற்று அதிகாலை நீலாங்கரையில் இருந்த பச்சையப்பனை காருடன் கடத்தி, பூந்தமல்லி கொண்டு சென்றுள்ளார். அங்கு வெற்றி இருந்துள்ளார். இரு தரப்பினருக்கும் தகராறு நடந்தது. ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது பச்சையப்பன், வெற்றி, சங்கர் ஆகியோர் தப்பி ஓடினர். கடத்தலுக்கு உதவ வந்த முத்துக்குமார் (35), ஜோசப் (38), திலக்ஜான் (34) ஆகியோர் போலீசாரிடம் சிக்கினர். பூந்தமல்லி போலீசார் மூன்று பேரையும் நீலாங்கரை போலீசில் ஒப்படைத்தனர். தப்பிய மூவரை தேடி வருகின்றனர்.
+
Advertisement

