கூடுவாஞ்சேரி, அக்.1:வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளது. இங்கு வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான அரசு பேருந்துகள், அரசு விரைவு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் உட்பட சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளுக்கு மாநகர பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை தினத்தையொட்டி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் சிறப்பு பேருந்துகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு திடீரென அமைச்சர் சிவசங்கர் பேருந்து நிலையத்திற்கு வந்து எத்தனை பேருந்துகள் இயக்கப்படுகிறது. எந்தெந்த ஊர்களுக்கு அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேலும் பயணிகளின் தேவைகள் சந்திக்கப்படுகிறதா வேறு ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா என்றும் எத்தனை பேருந்துகள் ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்யப்பட்டிருக்கிறது. இன்றைய தினம் இயக்கவிருக்கும் பேருந்துகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், தீபாவளிக்கு பயணிகள் கூடுதலாக பேருந்து நிலையத்திற்கு வர வாய்ப்புள்ளதால் பேருந்துகளை அதிகப்படுத்தவும், மேலும் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி தங்கள் சொந்த ஊருக்கு செல்லவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.