போரூர், ஜூலை 26: ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் எப்ரின்(38). இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் பருத்திப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு, 4ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில், வனிதா நேற்று மாலை தனது மகள்களுடன் பரித்திப்பட்டில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்கு சென்றார்.
அப்போது, வனிதா தனது மகள்களுடன் சிக்கன் பர்கர், சிக்கன் விங்ஸ் ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டார். அப்போது, சிக்கன் பர்கரின் உள்ளே புழுக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கடை ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினார். மேலும், தனது கணவர் எப்ரினை கடைக்கு வரவழைத்து புகார் தெரிவித்தார். அப்போது, கடை ஊழியர்கள் அலட்சியமாக பதலளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தம்பதியினர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர், அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போலீசார் விசாரித்தனர். மேலும், புழு இருந்த பர்கரை சாப்பிட்ட சிறுமிகள் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், உணவு பாதுகாப்பு துறையில் புகார் அளிக்குமாறு போலீசார் தெரிவித்தனர்.
அதன்பேரில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வேலன் தலைமையிலான குழுவினர் கடையில் இருந்த உணவுப் பொருட்கள், தயாரித்து வைக்கப்பட்டிருந்த பர்கர்கள் ஆகியவற்றை சோதனை செய்தனர். மேலும், உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வு கூடத்திற்கு எடுத்துச் சென்றனர். பிரபல கடையின் பர்கரில் புழுக்கள் இருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.