Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்: நோய் பரவும் என அச்சம்

காஞ்சிபுரம், ஜூலை 24: கோயிலுக்கும், பட்டுக்கும் பெயர் பெற்ற நகரம் காஞ்சிபுரம். இங்கு, கோயில்கள் நிறைந்துள்ளதால் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் உள்ளது. காஞ்சிபுரம், மாநகராட்சி பகுதிகளில் காஞ்சி காமாட்சி அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், கச்சபேஸ்வரர் கோயில் உள்ளிட்ட உலக புகழ்பெற்ற பல கோயில்கள் அமைந்துள்ளன. ஏராளமான சுற்றுலா பயணிகள், வெளிமாநில, வெளி மாவட்ட பக்தர்கள் என நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் காஞ்சிபுரத்திற்கு வருகை தருகின்றனர்.

இப்படி, வரும் சுற்றுலா பயணிகள் கோயில்களில் சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும், காஞ்சிபுரம் காந்தி சாலை பகுதிகளில் உள்ள பட்டு சேலைகளையும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், பேருந்து நிலையம் அருகில் உள்ள இரட்டை மண்டபம் சிக்னல் பகுதியில் கழிவுநீர் கால்வாய் மூடாமல் திறந்த நிலையில் உள்ளதால் அதிகளவில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரத்தின் பிரதான பகுதியான இப்பகுதியை, நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இங்கு கழிவுநீர் கால்வாய் மூடாமல் திறந்த நிலையில் உள்ளதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், காஞ்சிபுரத்திற்கு வரும் பொதுமக்கள், பட்டு சேலை எடுக்க வருவோர், கோயிலுக்கு வருபவர்கள் முகம் சுளிப்புடன் இச்சாலையை கடந்து செல்கின்றனர்.

குறிப்பாக இந்த பகுதியில் தனியார் ஓட்டல்கள், வணிக வளாகங்கள் அதிக அளவில் இருப்பதன் காரணமாக அடிக்கடி இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே, உடனடியாக இந்த கழிவு நீர் கால்வாயை மூட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.