Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மஞ்சமேடு வாரணவாசி இடையே சாலையோரத்தில் மண் குவியல்:வாகன ஓட்டிகள் அச்சம்

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த மஞ்சமேடு, அகரம், வளாகம், அளவூர் வழியாக வாரணவாசியை இணைக்கும் சாலை உள்ளன. இந்த சாலை வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் வாரணவாசி, ஒரகடம் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் இரவு பகலாக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சென்று வருகின்றனர். இவை மட்டுமின்றி இந்த வழியாக செல்லும் கார்கள் மற்றும் வயலுக்கு விவசாய பணிகளுக்காக செல்லும் வாகனங்களும் நாள்தோறும் சென்று வருகின்றன. இந்நிலையில், ஏற்கனவே இந்த சாலை குறுகிய சாலையாக உள்ள நிலையில் சாலையை ஒட்டியுள்ள கால்வாயை தூர்வாரும்போது அதிலிருந்து மண்களை சாலையிலேயே கொட்டி விட்டு சென்றுள்ளனர்.

தற்போது, அவை மண் மேடுகளாக மாறி உள்ளன. இதுபோன்ற நிலையில், தற்போது இந்த சாலை வழியாக நாள் தோறும் லாரி, தனியார் தொழிற்சாலைகளுக்கு செல்லும் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் சொல்லும்பொழுது மண்மேடு உள்ள பகுதியில் வாகன நெரிசல்கள் ஏற்படுகின்றன. இரவு நேரங்களில் இப்பகுதியில் விபத்துகளும் அவ்வப்பொழுது ஏற்படுகின்றன.இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்டது மஞ்சமேடு, அகரம், வளாகம், வாரணவாசி, தென்னேரி, கட்டவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் மக்களின் பிரதான சாலையாக விளங்குவது மஞ்சமேடு வாரணவாசி சாலை இந்த சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இரவு, பகலாக இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், சின்னிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் கல்குவாரிகளில் இருந்து ஜல்லி மற்றும் கருங்கல் பாறைகளை ஏற்றி வரும் லாரிகள் இந்த குறுகிய சாலை வழியாக செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நாள்தோறும் விபத்துக்குள்ளாகுவது தொடர் கதையாக உள்ளன. மேலும், ஒருசில நேரங்களில் சாலையை ஒட்டி மண் மேடுகளாக காணப்படும் பகுதிகளில் இரண்டு லாரிகளும் நேருக்கு நேர் செல்லும் பொழுது போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இது போன்ற நிலை குறித்து பலமுறை உள்ளாட்சி பிரதிநிதிகளிடமும், மாவட்ட அதிகாரிகளிடமும் தொடர்ந்து தெரிவித்தும் இதனால் வரை சாலையோரம் உள்ள மண் மேடுகளை அகற்ற எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.மேலும், இந்த வழியாக செல்லும் கனரக லாரிகளை கட்டுப்படுத்துவதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது போன்ற நிலையில் வரும் எதிர்காலங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதை தடுத்து நிறுத்தும் வகையில் சாலையின் ஓரம் உள்ள மண் மேடுகளை அகற்ற வேண்டும். இந்த சாலை வழியாக செல்லும் லாரிகளை மாற்றுப் பாதையில் செல்ல போலீசார் எச்சரிக்கை பலகை வைத்து அறிவுறுத்த வேண்டும் என கிராம மக்களும் வாகன ஓட்டிகளும் வலியுறுத்துகின்றனர்.