Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

களைகட்டிய காணும் பொங்கல்; மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

மாமல்லபுரம்: காணும் பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி, லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்து புராதன சின்னங்களை கண்டு ரசித்து, செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் விழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாமல்லபுரம் சுற்றுலாத் தலத்தில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தோடு குவிந்தனர். இதனால், மாமல்லபுரம் முழுவதும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. எத்திசையிலும் சுற்றுலாப்பயணிகளே காணப்பட்டனர். சென்னை புறநகர், தாம்பரம், காஞ்சிபுரம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், உத்திரமேரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் கட்டுச்சோற்றை கட்டி கொண்டு நேற்று காலை முதலே வரத் தொடங்கினர்.

கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, புலிக்குகை, கலங்கரை விளக்கம், கிருஷ்ணா மண்டபம், மகிஷாசுரமர்த்தினி, வராக மண்டபம் உள்ளிட்ட சிற்பங்களை சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர். மேலும், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் கடந்த 2019ம் ஆண்டு வெண்ணெய் உருண்டை பாறை முன்பு இருவரும் கை உயர்த்திய இடத்தில் நின்று சுற்றுலா பயணிகள் பலர் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, கடற்கரையில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைத்து திருப்பி அனுப்பட்டனர். மேலும், கடற்கரைக்கு வந்த பலர் அங்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலியை பார்த்து, கடற்கரையில் ஒரு பகுதியில் வட்டமிட்டு அமர்ந்தும், மணலில் உற்சாகமாக நடந்தும் பெரியோர்கள் முதல் சிறுவர்கள் வரை ஆனந்தமாக துள்ளி குதித்து தங்களது பொழுதை கழித்தனர்.

குழந்தைகள் கடற்கரை மணலில் ஆனந்தமாக ஓடி பிடித்து விளையாடிதையும் காண முடிந்தது. ஒன்றிய தொல்லியல் துறை டிக்கெட் கவுண்டர்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், விதியை மீறி சிலர் கம்பி வேலியை தாண்டி குதித்து புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க சென்றனர். காணும் பொங்கலையொட்டி, மாமல்லபுரத்திற்கு அதிகமான பயணிகள் வருவார்கள் என கணித்த மாமல்லபுரம் டிஎஸ்பி ரவி ஆபிராம், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், டிராபிக் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர், மாமல்லபுரம் வரும் பயணிகள் வாகனங்களை பூஞ்சேரி அரசு மருத்துவமனை நுழைவு வாயில், சென்னையில் இருந்து வரும் இசிஆர் நுழைவு வாயில் பகுதியில் தடுத்து நிறுத்தி தனியார் பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்களை அங்கேயே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்த ஏற்பாடு செய்தனர்.

இதையடுத்து, பயணிகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடு செய்த சிறப்பு பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் மூலம் மாமல்லபுரம் பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து புராதன சின்னங்களை நடந்தே சுற்றிப் பார்க்க சென்றனர். புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்நாட்டு பயணிகளுக்கு தலா ஒரு நபருக்கு ரூ.40, வெளிநாட்டு பயணிகளுக்கு தலா ரூ.600 வசூலிக்கப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான பயணிகள் வந்ததால் டிக்கெட் கவுண்டர்களில் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. இவர்களை, கட்டுப்படுத்த முடியாமல் தொல்லியல் துறை பாதுகாவலர்கள் மற்றும் ஊழியர்கள் திணறினர். லட்சக்கணக்கான பயணிகள் மாமல்லபுரம் வந்ததால் ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் தங்கும் விடுதிகள் மற்றும் சாலையோர கடைகள், சிற்ப கூடங்களில் அதிகளவில் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. பாதுகாப்பு பணியில் போலீசார், செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி சாய் பிரனீத் தலைமையில், மாமல்லபுரம் டிஎஸ்பி ரவி ஆபிராம் மேற்பார்வையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், திருக்கழுக்குன்றம் போலீஸ்

இன்ஸ்பெக்டர் விநாயகம், டிராபிக் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் முன்னிலையில், 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு மாமல்லபுரம் நகரம், இசிஆர் சாலை முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல், போலீசார் கடற்கரையில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து அங்கு வந்த பயணிகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்தனர். தொடர்ந்து, பயணிகள் போர்வையில் திருடர்கள் சுற்றி வருவதாக கூறப்பட்ட நிலையில், பயணிகள் தங்களது நகைகளை பாதுகாத்து கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டை மீறி கடலில் யாரும் குளிக்கக் கூடாது. விழிப்புடன் இருக்க வேண்டும் என அவ்வபோது போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி கொண்டே இருந்தனர். படகுடன் கூடிய நீச்சல் படை வீரர்களும், போலீஸ் ரோந்து வாகனமும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து, போலீஸ் எச்சரிக்கையையும் மீறி கடலில் குளிக்கலாம் என கடற்கரைக்கு வந்தவர்களை போலீசார் கடுமையாக எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

இதுகுறித்து, மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கூறுகையில், மாமல்லபுரம் போலீஸ் உட்கோட்டத்துக்குட்பட்ட மாமல்லபுரம், திருவிடந்தை, கோவளம், சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம், கொண்டங்கி ஏரி, தையூர் ஏரி, வாயலூர் பாலாறு தடுப்பனை, வல்லிபுரம் பாலாறு தடுப்பனை ஆகிய பகுதிகளில் பயணிகள் யாரும் குளிக்காத வகையிலும், மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில், திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயில், திருப்போரூர் முருகன் கோயில் மற்றும் திருக்கழுக்குன்றம் வேதகிரீஷ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு கருதி போலீசார் பணியமர்த்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்’ என்றார்.