திருக்கழுக்குன்றம் மலையடிவாரத்தில் ஆமை வேகத்தில் விநாயகர் கோயில் புனரமைப்பு பணி: விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை
திருக்கழுக்குன்றம், ஆக.8: திருக்கழுக்குன்றம் சொக்கப்பனை விநாயகர் கோயில் புனரமைப்பு பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதால், இப்பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் உள்ளது. இதன், உபகோயில் மலையடிவாரத்தையொட்டி சன்னதி தெருவில் சொக்கப்பனை விநாயகர் கோயில் இருக்கிறது. இக்கோயிலின், அனைத்து பகுதிகளும் மிகவும் சேதமடைந்து, பக்தர்கள் வழிபட இயலாத நிலையில் இருந்தது. இந்த, பழமைவாய்ந்த இக்கோயிலை புனரமைத்து, பக்தர்கள் வழிபட வழிவகை செய்ய வேண்டுமென்று பக்தர்களின் நீண்டகால கோரிக்கையை தொடர்ந்து, கோயில் நிர்வாகம் சார்பில் கடந்தாண்டு ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புனரமைப்பு பணிகள் தொடங்கியது.
ஆனால், ஓராண்டுகளை கடந்தும் இப்பணி முடிக்கப்படாமல், அரைகுறையாக உள்ளது. மேலும், புனரமைப்பு பணிகள் நடப்பதால் நுழைவு வாயில் பூட்டியே கிடக்கிறது. இதனால், பக்தர்கள் வழிபட முடியாமல் போகிறது, சிறிய அளவில் உள்ள பழமையான இக்கோயிலின் புனரமைப்பு பணியே ஓராண்டுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடப்பது என்பது வேதனையளிக்கிறது. எனவே, இப்புனரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, இப்புனரமைப்பு பணியை செய்யும் ஸ்தபதி தரனிடம் கேட்டபோது; 2022-23ல் இப்புனரமைப்பு பணிக்கான திட்ட மதிப்பீடு போடப்பட்டு, கடந்தாண்டு ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திட்ட மதிப்பீடு போடப்பட்டு ஆண்டுகள் கடந்த நிலையில் கட்டுமான அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் என்பது ஒரு புறமிருக்க, ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.8 லட்சத்தில் ஜிஎஸ்டி எல்லாம் போக என குறைந்த விலையில் நான் இப்பணியை மேற்கொண்டாலும், பணிக்கான தொகையை வேதகிரீஸ்வரர் கோயில் நிர்வாகத்தினர் முறையாக வழங்க மறுக்கின்றனர். அதனால் தான் தாமதமாகிறது’ என்றார். கோயில் நிர்வாகத்திடம் கேட்டபோது; வேலை நடப்பதற்கெல்லாம் நாங்கள் முறையாக பணம் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஸ்தபதி தான் தாமதப்படுத்துகிறார் என்றனர்.