Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேடந்தாங்கல் சரணாலயத்தில் பறவைகள் சீசன் துவக்கம்: 10 ஆயிரம் பறவைகள் குவிந்தன

மதுராந்தகம், நவ.1: வேடந்தாங்கல் சரணாலயத்தில் பறவைகள் சீசன் துவங்கிய நிலையில், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் குவிந்துள்ளன. மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா, சைபீரியா, கனடா, இலங்கை, பர்மா, உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து 21 வகையான நத்தை கொத்தி நாரை, கூழைக்கடா, வர்ணனாரை, நீர்காகம், பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், ஊசி வாத்து, நாமகோழி உள்ளிட்ட பறவைகள் சரணாலயத்தில், ஏரியில் உள்ள மரங்களில் தங்கி இனப்பெருக்கம் செய்துவிட்டு குஞ்சு பறவைகளுடன் தங்களது சொந்த நாடுகளுக்கு செல்வது வழக்கம்.

வேடந்தாங்கல் பகுதியில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி சில நாட்களிலேயே கனமழை பெய்ததால் ஏரியில் 10 அடி வரை தண்ணீர் நிரம்பி ஏரியில் உள்ள மரங்களை சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பறவைகளுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பல்லாயிரக்கணக்கான நத்தை கொத்தி நாரை, 100க்கும் மேற்பட்ட பாம்பு தாரா, 500மேற்பட்ட கூழைக்கடா, 200க்கும் மேற்பட்ட நீர் காகம், நூற்றுக்கும் மேற்பட்ட வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் தற்பொழுது வந்து தங்கியுள்ளது. இதனால், பறவைகள் சரணாலயம் முழுவதும் பறவைகள் நிறைந்து காட்சியளிக்கிறது.

புதிதாக வந்து தங்கியுள்ள நத்தை குத்தி நாரை பறவைகள் ஏரியில் உள்ள செடி கொடிகளை பறித்து கூடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பறவைகளைக் காண ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் பார்வையிட உள்ளதால் சரணாலயத்தில் பராமரிப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது. நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5, செல்போன் கேமரா கொண்டு செல்ல ரூ.50, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் பெரியவருக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50, கேமரா மற்றும் செல்போன் கொண்டு செல்ல ரூ.500 நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த பறவைகள் சரணாலயத்தில் இன்று முதல் பறவைகள் சீசனும் பார்வையாளர்களின் சீசனும் களை கட்டியுள்ளது.