Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேளம்பாக்கத்தில் ஏற்படும் விபத்து, நெரிசலுக்கு தீர்வுகாண போக்குவரத்து காவல் நிலையம் அமைக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருப்போரூர், ஆக.11: கேளம்பாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏற்படும் விபத்து, நெரிசலுக்கு தீர்வுகாண கேளம்பாக்கத்தில் போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்ப்பார்த்து காத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த சில காவல் நிலையங்களையும், சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தில் இருந்த காவல் நிலையங்களையும் பிரித்து சென்னைப் புறநகரான தாம்பரத்தில் புதிய காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்டது. இந்த காவல் ஆணையரகம் தற்போது சோழிங்கநல்லூரில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கரணையில் இணை ஆணையர் அலுவலகம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த இணை ஆணையரின் கட்டுப்பாட்டில் கேளம்பாக்கம் உதவி ஆணையர் அலுவலகம் வருகிறது.

கேளம்பாக்கம், கானத்தூர், தாழம்பூர் ஆகிய காவல் நிலையங்களும் மற்றும் விரைவில் தொடங்கப்பட உள்ள சிறுசேரி காவல் நிலையமும் இந்த கேளம்பாக்கம் உதவி ஆணையரின் கட்டுப்பாட்டில் இயங்கும். இதுமட்டுமின்றி போக்குவரத்து காவல் புலனாய்வு பிரிவு பள்ளிக்கரணையில் செயல்பட்டு வருகிறது. கானத்தூர், கேளம்பாக்கம், தாழம்பூர், செம்மஞ்சேரி ஆகிய காவல் நிலையங்களின் எல்லைக்குள் வாகன விபத்து நடந்து வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டாலோ, உயிர்ச்சேதம் ஏற்பட்டாலோ பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையத்தில்தான் புகார் செய்ய வேண்டும் என்ற நிலை தற்போது உள்ளது. அங்கிருந்து போலீசார் வந்து விபத்து நடந்தது எப்படி, விபத்திற்கு காரணம் யார் என்பது குறித்து ஆய்வு செய்து புகைப்படங்களை எடுத்த பிறகே வழக்கு பதிவு செய்து வாகனம் சேதம் அடைந்ததற்கான சான்றிதழ் அல்லது உயிரிழப்புக்கான எப்ஐஆர் போன்றவற்றை வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பொது மக்களுக்கு வீண் அலைச்சலை உருவாக்குவதாக கருத்து எழுந்துள்ளது. கானத்தூர், கேளம்பாக்கம், தாழம்பூர், செம்மஞ்சேரி ஆகிய காவல் நிலையங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கும் தாம்பரம் சிட்லபாக்கம் போக்குவரத்து காவல் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கும் வெகு தூரம் உள்ளது. தற்போது கேளம்பாக்கம் அடுத்த படூரில் சிறிய அளவில் போக்குவரத்து போலீஸ் பூத் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிபவர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் மட்டும் ஈடுபடுகின்றனர். ஆகவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் சிரமத்தை தவிர்க்க இதை தரம் உயர்த்தி முழுமையான போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையமாக மாற்றி அமைத்து விபத்து குறித்த சான்றுகள், எப்.ஐ.ஆர். பெறுவதற்கு தாம்பரம் காவல் ஆணையர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தற்போது ஓஎம்ஆர்., ஈசிஆர்., சாலைகளில் அதிக வாகனப் போக்குவரத்து உள்ளதால் அந்தந்த காவல் நிலையங்களிலேயே போக்குவரத்துப் பிரிவை உருவாக்கி தனி போலீசாரை நியமிக்க வேண்டும் என்றும் பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.