Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருப்போரூர் பகுதியில் குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் கும்பல்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்போரூர், ஜூலை 25: திருப்போரூர் பகுதியில் குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக செவ்வாய்க்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். இது மட்டுமின்றி கிருத்திகை போன்ற விசேஷ தினங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது. இதில், கோயிலின் தெற்கு வாசல் மற்றும் கிழக்கு வாசல் பகுதிகளில் ஏராளமான பிச்சைக்காரர்கள் அமர்ந்து கொண்டு கோயிலுக்கு வரும் பக்தர்கள் தரும் பணத்தை வாங்கி பிழைப்பு நடத்துகின்றனர்.

இந்நிலையில், திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் நாடோடி கும்பல் ஒன்று சில ஆண்டுகளாக தங்கி உள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்த 5க்கும் மேற்பட்ட சிறுமிகள், சிறுவர்கள் தங்களுடன் கைக்குழந்தை ஒன்றை தூக்கிக்கொண்டு திருப்போரூர் பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், கந்தசுவாமி ேகாயில் ஆகிய இடங்களில் சுற்றித்திரிந்து பொது மக்கள் மற்றும் பக்தர்களிடம் காசு கேட்டு பிச்சை எடுக்கின்றனர். சிலர் இரக்கப்பட்டு அவர்களுக்கு பணம் கொடுக்கின்றனர்.

சிலர் பணம் கொடுக்க விருப்பமில்லாமல் உணவு, குளிர்பானம், மோர் போன்றவற்றை வாங்கித் தருகின்றனர். 2 மணி நேரத்திற்கு ஒருமுறை இந்த குழந்தைகளின் பெற்றோர் பைக்கில் வந்து குழந்தைகளிடம் பணத்தை வாங்கிச் செல்கின்றனர். சமூக ஆர்வலர்கள் சிலர் அந்த குழந்தைகளின் பெற்றோரிடம் சென்று இதுபோன்று குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்து பணம் பெறுவது சட்ட விரோத காரியம் என்றும், அவர்களை படிக்க பள்ளிக்கு அனுப்புங்கள் என எடுத்துக் கூறியும் இச்செயல் தொடர்கிறது. ஆகவே, மாவட்ட நிர்வாகம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழுவினர் திருப்போரூர் பகுதியில் குழந்தைகள் பிச்சை எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.