மதுராந்தகம், மே 25: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் செயல்பட்டு வரும் யூனியன் வங்கி சார்பில் வேளாண் விழிப்புணர்வு முகாம் செங்குந்தர் அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. இம்முகாமில் வங்கியின் பிராந்திய துணை மேலாளர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வேளாண்மை துறை நிர்வாக அலுவலர் ஷீலா, தோட்டக்கலைத்துறை உதவ இயக்குநர் துர்காதேவி, தேசிய வேளாண் நிறுவனத்தின் துணை இயக்குநர் காஞ்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுராந்தகம் வங்கி மேலாளர் பாலச்சந்திரன் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் திட்டங்கள், விவசாயம் சார்ந்த உதவிகள், பருவ கால பயிர்கள் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, வங்கி சார்பில் வழங்கப்படும் பயிர் கடன், விவசாய கடன், கால்நடை பராமரிப்பு கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் ஆகியவை குறித்து வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த சுய உதவிக் குழுக்களுக்கு சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான கடன் ஒப்புதல் கடிதங்கள் மற்றும் காசோலைகள் வழங்கப்பட்டன. இதில், வங்கி வாடிக்கையாளர்கள், சுய உதவிக்குழு பெண்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யூனியன் வங்கி நிர்வாகம் செய்திருந்தது.


