செய்யூர், ஜூலை 26: செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்துள்ளது பருக்கல் கிராமம். இக்கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல பருக்கல் பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர். இந்த பேருந்து நிறுத்தம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.
மிகவும் பழமையான இந்த கட்டிடம் நாளடைவில் பழுதாகி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உட்பட பயணிகள் மழை மற்றும் கடும் வெயில் காலங்களில் நிழலில் ஒதுங்க இடம் இன்றி சாலையிலேயே நிற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இப்பகுதியில், புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. எனவே, பயணிகள் நலனை கருத்தில்கொண்டு இப்பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.