Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சினிமாவை மிஞ்சும் வகையில் காஞ்சிபுரம் திருமண விழாவில் மணமக்கள் சைக்கிளில் பயணம்: பல்லக்கில் சுமந்த சகோதரர்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தாய் படவேட்டம்மன் கோயில் தெருவை சேர்ந்த வடிவேல் என்பவரது மகள் யோகலஷ்மிக்கும் மணமகன் மனோஜ் என்பவருக்கும் காஞ்சிபுரம் அருகே வேளிங்கைபட்டறை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. மணமக்கள் யோகலஷ்மி - மனோஜ் இருவரும் திருமண மண்டபத்திற்கு அருகில் உள்ள சிவன் கோயிலில் பூஜைகள் செய்தனர். பின்னர், அண்ணாமலை திரைப்படத்தில் வரும் சைக்கிள் பாடல் காட்சியைப்போல இருவரும் சைக்கிளில் சென்றதை கண்ட பொதுமக்கள் பலரும் வியப்பில் ஆழ்ந்தனர். பெரும்பாலும் மணமக்கள் திருமண ஊர்வலத்தின்போது குதிரை வண்டி, சாரட் வண்டி மேளதாளங்கள் முழங்க செல்வார்கள்.

ஆனால், இவர்கள் சைக்கிளில் சென்றது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. திருமண மண்டபத்திற்கு வந்தவுடன் மணமகளுடன் பிறந்த நான்கு சகோதரர்களும், மணமக்களை வரவேற்றனர். பின்னர், மணமகளை பல்லக்கில் அமர வைத்து நால்வரும் சுமந்து திரைப்பட பாடலுக்கு ஏற்ப நடனமாடியபடியே திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றனர். சமீப காலமாக திருமண விழாக்களில் அனைத்தும் திரைப்படங்களின் கொண்டாட்ட காட்சிகள் போலவும், சில நேரங்களில் அதை மிஞ்சும் வகையில் உறவினர்கள் கூட நடனம் ஆடுவது என அனைத்தும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. மேலும், இந்த திருமண நிகழ்வில் புதிய புயல் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள், டிஜே மற்றும் பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடனமாடி மகிழ்ந்தனர்.