திருச்சி, ஜூலை 11:திருச்சி, எ.புதூர் அப்துல்கலாம் நகரை சேர்ந்தவர் கவுரி(29). இவர் கடந்த 3 ஆண்டுகளாக கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி இவர் வேலைக்கு சென்றார். வீட்டிலிருந்த அவரது தாய் வீட்டை பூட்டி சாவியை மிதியடியின் கீழே வைத்துவிட்டு ஊருக்கு சென்றதாக தெரிகிறது. அன்று மாலை கவுரி வீடு திரும்பியபோது மர்ம நபர்கள் சாவியை பயன்படுத்தி, வீட்டினுள் புகுந்து 1 பவுன் தங்க நகை மற்றும் ₹10 ஆயிரம் பணத்தை திருடியது தெரிந்தது. இது குறித்து எ.புதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மற்ெறாரு சம்பவம்: திருச்சி, கே.கே.நகர் ஐயப்பன் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (74). இவர் கடந்த மே மாதம் 27ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு சென்றவர் கடந்த 6ம் தேதி திரும்ப வந்து பார்த்தார். அப்போது முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது, ஆனால் உள்ளிருந்த எந்த பொருளும் திருடு போகவில்லை என தெரிந்தது. இது குறித்து கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.