திண்டுக்கல், ஜூலை 10: திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக் அலி தலைமை வகித்தார். வருவாய் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுகந்தி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில செய்தி தொடர்பாளர் முருகேசன், நிர்வாகிகள் ராஜாகிளி முருகன், நல்லதம்பி, நடராஜன், ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேட்டரிக் ரெய்மாண்ட், வின்சென்ட் பால்ராஜ் கோரிக்கை விளக்க உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தேசிய கல்வி கொள்கையை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். எட்டாவது ஊதிய குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் உறுதி செய்ய வேண்டும். கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அங்கன்வாடி, சத்துணவு, ஊழியர்களை நிரந்தர ஊழியராக்க வேண்டும். ஒன்றிய அரசு ரயில்வே, நிலக்கரி சுரங்கம், கப்பல், தபால், மின்சாரம் உள்பட பல்வேறு நிறுவனங்களை தனியார் மயமாக்குதலை நிறுத்த வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.