Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம்

சிதம்பரம், ஜூலை 11: நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழாவில் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நேற்று காலை முதல் கனக சபையில் ஏறி சுவாமி தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன உற்சவ திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இன்று (11ம் தேதி) தேரோட்டமும், 12ம் தேதி ஆனி திருமஞ்சன திருவிழாவும் நடைபெற உள்ளது. இதில் ஜூலை 10, 11, 12, 13 ஆகிய 4 நாட்களுக்கு கனகசபையில் ஏறி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய பொது தீட்சிதர்கள் தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க கோரி தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெமினி ராதா, தமிழக முதலமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை அதிகாரி, மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைத்தார். மேலும் தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் மாநிலத் துணைத் தலைவர் சம்மந்த மூர்த்தி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் தொன்று தொட்டு இருந்து வரும் கனகசபையில் ஏறி சுவாமி தரிசனம் செய்து வரும் நடைமுறை தொடர வேண்டும் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் கனகசபையில் ஏறி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து நேற்று காலை முதல் திருச்சோபுரநாதர் கோயில் செயல் அலுவலர் மகேஸ்வரன், விருத்தகிரீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் மாலா ஆகியோர் தலைமையில் சிதம்பரம் நகர போலீசார் பாதுகாப்புடன் கனகசபை மீது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏறி சுவாமி தரிசனம் செய்தனர். சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி தலைமையில் நகர காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் பாபு, உதவி ஆய்வாளர் பரணிதரன் உள்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் நடராஜர் கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.