வேலூர், ஜூலை 24: மது அருந்திவிட்டு தூங்கவிடாமல் தினமும் நள்ளிரவில் கொடுமைப்படுத்தியும், தூக்க மாத்திரை கொடுத்து என்னை ஆபாசமாக படம் வீடியோ எடுத்து மிரட்டும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பியிடம் மனைவி புகார் அளித்தார்.வேலூர் எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி மயில்வாகனனிடம் 25 வயது இளம் பெண் மனு ஒன்றை அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
எனக்கு கடந்த ஜனவரி 24ம் தேதி காட்பாடியில் என்னை கட்டாயப்படுத்தி வேறு மதம் மாற்றி திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து என்னுடைய மதத்தின் படி பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அதன் பிறகு நான் யாரிடமும் செல்போனில் பேசக்கூடாது மற்றும் எனது உறவினர்கள் யாரிடமும் பேசக்கூடாது என்று எனது கணவர் சொல்லி வந்தார்.
நான் குளிக்கும்போது கதவை திறந்து வைத்து தான் குளிக்க வேண்டும் என்று டார்ச்சர் செய்தார். எனக்கு இரவு தூக்க மாத்திரை கொடுத்து ஆபாச படம், வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி இரண்டு செல்போன் மற்றும் லேப்டாப்பில் பதிவு செய்து கொண்டு என்னை தினமும் மிரட்டி வந்தார். எனக்கும் என் கணவருக்கும் ஒரே மாதிரியான செல்போன் வாங்கி கொடுத்து அதை ஒன்றுடன் ஒன்று இணைத்து எனக்கு வரும் எல்லா அழைப்புகளையும் அவர் ஒட்டுக் கேட்கிறார்.
நாங்கள் திருமணம் முடித்து ஹனிமூன் செல்ல வேண்டும் என்று கூறி ரூ.10 லட்சம் வாங்கி வா என்று என்னை டார்ச்சர் செய்தார். அதை நான் அப்போது யாரிடமும் சொல்லவில்லை. மேலும் எனது கணவர் சிஏ முடித்துள்ளதாகவும், ஆந்திராவில் வேலை செய்வதாகவும் மாதம் ஒன்றரை லட்சம் சம்பாதிக்கிறேன் என்றும் மாங்காட்டில் சொந்தமாக வீடு உள்ளதாகவும் பொய் கூறியுள்ளார்.
நாங்கள் குடியிருந்த வீட்டையும் என்னையும் எனது பெற்றோருக்கு தெரியப்படுத்தாமல் விற்று விட்டார். மேலும் கடந்த மார்ச் மாதம் என்னை அவரது தந்தையுடன் புனேவுக்கு அழைத்து சென்று தங்க வைத்தார். அதன் பிறகு தான் அந்த வீட்டை விற்ற விஷயம் எனக்கு தெரியவந்தது. நான் புனேவில் தங்கியிருந்த மூன்று மாதத்தில் தினமும் என் கணவர் வீட்டிலேயே இருந்து கொண்டு மது அருந்திவிட்டு என்னை தூங்கவிடாமல் சைடு டிஷ் செய்து கொடு என்று தினமும் நள்ளிரவில் கொடுமைப்படுத்தி வந்தார்.
இது சம்மந்தமாக நான் என் கணவரிடம் கேட்டதற்கு மாமனாரிடம் என்னை பாலில் விஷம் வைத்து கொன்று விட்டு தானாக தற்கொலை செய்து கொண்டார் என்று கூறிவிடுவேன் என்று தெரிவித்தார். இதனால் நான் மிகவும் பயந்து என் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் சந்தோஷமாக வாழ முடியாமல் தூக்கமில்லாமல் தவித்து வந்தேன்.
இந்நிலையில் என் அம்மாவின் உடல் சரியில்லாத காரணத்தினால் அவரை பார்க்க வேண்டும் என்று கூறி என்னை மட்டும் என் கணவர் தனியாக புனேவில் இருந்து அனுப்பி விட்டார். அதன் பின்னரும் என் பெற்றோர் வீட்டில் இருக்கும்போது கூட என்னை விடாமல் தொடர்ந்து செல்போனில் வீடியோ கால் மூலம் போன் செய்து என்னை டார்ச்சர் செய்து வந்தார். என் கணவரிடம் இருந்து, என்னையும் எனது நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பிலான கார், உடமைகளையும் மீட்டு, என்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியும், டார்ச்சர் செய்த என் கணவர் மற்றும் எனது மாமனார் ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.