Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பரனூர் - ஆத்தூர் சுங்கச்சாவடிகளுக்கு இடையிலான தேசிய நெடுஞ்சாலையை ₹64 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்

மதுராந்தகம், ஜூலை 11: பரனூர் சுங்கச்சாவடி முதல் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி வரை 50 கி.மீ. தொலைவுள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ₹64 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகளை மாமண்டூர் பாலாற்றின் அருகில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி முதல் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி வரை 50 கிலோ மீட்டர் தொலைவுள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை கடந்த பருவ மழையின்போது பெய்த கனமழையாலும், தினமும் லட்சக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருவதாலும் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறியது. மேலும், சர்வீஸ் சாலையும் சேதம் அடைந்தது.

குறிப்பாக மாமண்டூர், படாளம், சோத்துப்பாக்கம், பாலாறு மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை கடுமையாக சேதம் அடைந்ததது. குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் சார்பில் கோரிக்கை எழுந்தது. அதன்படி, பரனூர் சுங்கச்சாவடி முதல் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி வரை 50 கிலோ மீட்டர் தொலைவுள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க ₹64 கோடியை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒதுக்கீடு செய்து சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிதாக தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி நேற்று மாமண்டூர் பாலாற்றின் அருகில் நடைபெற்றது. இதில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், பரனூர் சுங்கச்சாவடியில் இருந்து ஆத்தூர் சுங்கச்சாவடி வரை 50 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை 2 மார்க்கமாகவும் சீரமைத்து புதிய தார் சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும், சர்வீஸ் சாலைகளும் சீரமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் 6 மாதத்தில் முடிக்கப்படும் என்றனர். உத்திரமேரூர் புறவழிச்சாலை: இதேபோல் உத்திரமேரூரில் புறவழிச்சாலை அமைக்கும் பணியும் நேற்று தொடங்கியது. உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், உத்திரமேரூரைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், நாள்தோறும் உத்திரமேரூர் வழியாக காஞ்சிபுரம், மதுராந்தகம், செங்கல்பட்டு, வந்தவாசி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலை, கல்வி, மருத்துவம் என பல்வேறு பணிகளுக்காக சென்று வருகின்றனர்.

மேலும், உத்திரமேரூர் தொடர்ந்து வளர்ச்சியை அடைந்து வரும் நிலையில், உத்திரமேரூர் பஜார் வீதி வழியாக அனைத்து வாகனங்களும் சென்று வருவதால், தினசரி காலை மாலை வேளைகளில் அனைத்து தரப்பு மக்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால், பல ஆண்டுகளாக உத்திரமேரூரில் புறவழிச்சாலை அமைத்துத் தரவேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கையின் பேரில், புறவழிச்சலை அமைக்க ₹37.08 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இப்பணிக்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு, புறவழிச்சாலை பணியினை தொடங்கி வைத்தார். பின்னர், புறவழிச்சாலை அமையவுள்ள பணிகளின் வரைபடங்களை பார்வையிட்டு, பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், புறவழிச்சாலையை தரமான சாலையாகவும், விரைந்து பணிகளை முடிக்கவும் உத்தரவிட்டார். நிகழ்வின்போது உத்திரமேரூர் ஒன்றியச் செயலாளர் ஞானசேகரன், நகரச் செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.சசிகுமார், கோட்ட பொறியாளர் நாராயணன், உதவி கோட்ட பொறியாளர் கோவிந்தராஜன், உதவி பொறியாளர் அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.