கிருஷ்ணகிரி, ஜூலை 23: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள், போலுப்பள்ளி மத்திய நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகளை இலவசமாக பெறலாம் என சமூக காடுகள் மற்றும் விரிவாக்கம் மையம், மத்திய நாற்றங்கால் பண்ணை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் வனப்பரப்பை 23.7 சதவீதத்தில் இருந்து, 33 சதவீதமாக உயர்த்தும் நோக்கோடு, தமிழ்நாடு பசுமை இயக்கம் நடைமுறைப்படுத்துவதாக அறிவித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பர் 24ம்தேதி, செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் துவக்கி வைத்தார். அதிக அளவிலான நாட்டு மரங்கள் நடுவது மற்றும் ஊக்குவிப்பது பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும். இந்த இயக்கத்தின் கீழ், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உயர் ரக மரங்களான சந்தனம், செம்மரம் மற்றும் ஈட்டி மரம் போன்ற மரங்களை வளர்க்க விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். இயற்கை வளங்களை நிலையான முறையில் பயன்படுத்தி, வனப் பகுதியில் வசிக்கும் பழங்குடியினர், விவசாயிகள், கிராம மக்கள் போன்ற உள்ளூர் சமுகங்களின் வருமானத்தை பெருக்கவும், இந்த திட்டம் உதவும்.
பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்காக, பல்வேறு மாவட்டங்களில் வனத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நாற்றங்கால்கள் போன்றவற்றின் மூலமாக 2.80 கோடி மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் தற்போது தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் மூலம், உயர் ரகத்துடன் தரமான மரக்கன்றுகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்க, மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி வனக்கோட்டம் சூளகிரி சமூக காடுகள் மற்றும் விரிவாக்கம் மையம் மத்திய நாற்றங்கால் பண்ணை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் கூறியதாவது: கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் மத்திய நாற்றங்கால் பண்ணை அமைந்துள்ளது. இங்கு விவசாயிகளுக்கு தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் மூலம் பல்வேறு உயர்தர மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உயர் ரக தரமான மரக்கன்றுகளான சந்தனம், தேக்கு, மலைவேம்பு, இலுப்பை, நாவல், மகாகனி, வேங்கை, ஈட்டி ஆகிய மரக்கன்றுகள் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் இலவசமாக வழங்கப்படுகிறது. தற்போது மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளது. மழை காலங்களை பயன்படுத்தி, விவசாய நிலங்களில், ஊடு பயிராகவோ அல்லது தொகுப்பாகவோ, வரப்பு நடவாகவோ நடவு செய்து பயன்பெறலாம். நிலத்தின் சிட்டா நகல், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று கொடுத்து, இலவசமாக மரக்கன்றுகளை பெற்று பயன்பெறலாம். மேலும் விவரம் அறிய, மரக்கன்றுகளை பெற வனச்சரக அலுவலர் 80720 00523, வனவர்கள் 98947 98996, 97870 76217 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு வனச்சரக அலுவலர் தெரிவித்துள்ளார்.