ஈரோடு, ஜூலை 14: ஈரோடு மாவட்டம், கோபி, கலிங்கியம், கோட்டுபுள்ளாம்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசியை விற்பனைக்காக கார் மற்றும் வேனில் கடத்தி வந்த கோபி, ராம்நகரை சேர்ந்த அப்துல்லா (45), அதேபகுதி பகுதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (39), கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த அபி (எ) அபிலாஷ் (35) ஆகியோரை கடந்த ஜூன் 23ம் தேதி, மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து, ஈரோட்டில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 5.01 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் வேனையும் பறிமுதல் செய்தனர்.
தொடர் ரேஷன் அரிசி பதுக்கல் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட மூவரையும் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். இதனை ஏற்ற கலெக்டர் கந்தசாமி, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட அப்துல்லா, நவநீதகிருஷ்ணன், அபிலாஷ் ஆகிய மூவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், ஈரோடு சிறையில் இருந்த 3 பேரும், போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.