பெரம்பலூர், ஜூலை 10: பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர் முகாம் வரும் 12ம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; பொது விநியோகத்திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம்,
பெரம்பலூர் தாலுக்கா பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுந்தரராமன் தலைமையிலும், வேப்பந்தட்டை தாலுக்கா, தழுதாழை கிராமத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வாசுதேவன் தலைமையிலும், குன்னம் தாலுக்கா, புதுவேட்டக்குடி கிராமத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஷ்வரி தலைமையிலும், ஆலத்தூர் தாலுக்கா நாட்டார்மங்கலம் கிராமத்தில்,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார் தலைமையிலும் வரும் 12ம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான குறைகளைத் தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.