திண்டுக்கல், ஜூலை 11: திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு துறை பணியாளர்களுக்கான பணியாளர் நாள் இன்று நடைபெற உள்ளது. இதில் பணியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்திடும் வகையில், இரு மாதங்களுக்கு ஒரு முறை பணியாளர் நாள் (குறைதீர்ப்பு) நடத்தப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி திண்டுக்கல் மண்டல பதிவாளர் கட்டுபாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களின் பணித்திறனை மேம்படுத்தி, உறுப்பினர்களுக்கு சிறந்த சேவை வழங்கும் பொருட்டும், பணி தொடர்பாகவும், பணியின் போதும் அல்லது வேறு வகையிலும் ஏற்படும் குறைகளை பகிர்ந்து அக்குறைகளை விதிகளுக்குட்பட்டு தீர்வு செய்திடும் வகையிலும் மண்டல அளவில் பணியாளர் நாள் இன்று காலை 10.30 மணிக்கு திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் மண்டல இணைப்பதிவாளர் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ஆகியோரின் தலைமையில் நடைபெற உள்ளது.
திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் பணியாளர்கள் தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பங்களை வழங்கி பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.