திருப்பூர், ஜூலை 15: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாநகர மாவட்ட 2வது மாநாடு திருப்பூர் ஆலங்காடு பகுதியில் நேற்று நடைபெற்றது. பி ஆர் நடராஜன், ராஜேந்திரன், சசிகலா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் துணை மேயர் எம்கேஎம் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில் திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் 100 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். திருப்பூர் மாநகராட்சி 19-வது வார்டு இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அருகில் செயல்பட்டு வரும் 1909 என்ற டாஸ்மாக் கடையை மூட வேண்டும்.
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள சொத்துவரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகளுக்குள் அரசு தொழில்நுட்ப கல்லூரி மற்றும் வடக்கு சட்டமன்ற தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் முழுமையாக பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.