ஒடுகத்தூர், ஜூலை 28: வேலூரில் இருந்து ஒடுகத்தூருக்கு நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் அரசு பஸ் வந்தது. பஸ்சை கொட்டாவூர் பகுதியை சேர்ந்த டிரைவர் பார்த்திபன்(45) என்பவர் ஓட்டினார். ஒடுகத்தூரில் பயணிகளை இறக்கிவிட்டு பெரிய ஏரியூரில் நிறுத்துவதற்காக நள்ளிரவு பஸ்சை சந்தைமேடு அருகே ஓட்டிச்சென்றபோது, மதுபோதையில் தள்ளாடியபடி வாலிபர் சென்றார். இதனால் பஸ் டிரைவர் ஹாரன் அடித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த போதை வாலிபர், பஸ் டிரைவர் பார்த்திபன், கண்டக்டர் லோகராஜ் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கற்களை எடுத்து பஸ்சின் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பியோடிவிட்டார். இதுகுறித்து பஸ் டிரைவர் பார்த்திபன் கொடுத்த புகாரின்பேரில், வேப்பங்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், பஸ் கண்ணாடியை உடைத்தவர் ஒடுகத்தூர் போயர் தெருவை சேர்ந்த வாலிபர் தாமோதரன் என தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர்.