திருவள்ளூரில் சரக்கு ரயில் தீ விபத்து எதிரொலி பெங்களூருக்கு 37 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கம் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து அனுப்பி வைப்பு
வேலூர், ஜூலை 14: திருவள்ளூரில் சரக்கு ரயில் தீ விபத்து காரணாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் சென்னை, பெங்களூருக்கு செல்ல பயணிகளுக்கு 37 அரசு சிறப்பு பஸ்கள் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. சென்னை மணலியில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு 52 டேங்கர்களுடன் நேற்று அதிகாலை சரக்கு ரயில் புறப்பட்டது.
அதிகாலை 5.20மணிக்கு திருவள்ளூர் அருகே ஏகாட்டூர் பகுதியில் வந்தபோது திடீரென சரக்கு ரயிலின் பின் பகுதியில் உள்ள ஒரு டேங்கரில் தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென அடுத்தடுத்த டேங்கர்களிலும் பரவியது. இதனால் சென்னை-பெங்களூர் இடையே செல்லும் அனைத்து ரயில்களும் அங்கே நிறுத்தப்பட்டன. மேலும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரயில் நிலையத்தில் பல்வேறு ஊர்களுக்கு செல்ல வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் காட்பாடி ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வெளியூர் செல்ல அதிகளவில் பயணிகள் வந்து இருந்தனர். மேலும் வேலூரில் இருந்து செல்லும் பீச் ரயில் காட்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 8 மணிக்கு பிறகு ரத்து செய்யப்பட்டது. மேலும் வெளியூர்களில் இருந்து வந்த பயணிகள் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.
இதற்கிடையில் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பெங்களூர், சென்னைக்கு செல்லும் பயணிகள் அவதிக்கு ஆளாவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. சென்னைக்கு 35 அரசு சிறப்பு பஸ்களும், பெங்களூருக்கு 2 அரசு சிறப்பு பஸ்களும் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. இதில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு பஸ்சில் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.
முன்பதிவு இல்லாத பயணிகளுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. 25 அரசு பஸ்களில் முன் பதிவு செய்த பயணிகள் புறப்பட்டு சென்றனர். உடனடியாக அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் சிரமமின்றி பயணம் செய்தனர் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.