Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கடலூரில் இருந்து ஆந்திராவுக்கு பவள பாறைகள் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து மீனவர் சாவு

கடலூர், ஜூன் 17: கடலூரிலிருந்து ஆந்திராவுக்கு பவளப்பாறைகள் ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் முதுநகரில் செயற்கை பவள பாறைகள் தயார் செய்யப்பட்டு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் கடலூரில் இருந்து ஆந்திராவுக்கு செயற்கை பவளப்பாறைகள் கோட்டியா என்னும் படகு மூலம் அனுப்பப்பட்டது. கடலூர் பகுதியை சேர்ந்த 7 பேர் இந்த படகில் பயணித்தனர். இந்த படகானது ஆந்திராவில் செயற்கை பவளப் பாறைகளை இறக்கி விட்டு, மீண்டும் கடலூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தது.

நெல்லூர் பகுதியில் வந்தபோது, கடல் சீற்றத்தின் காரணமாக எதிர்பாராதவிதமாக கடலில் படகு கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 7 பேரும் தண்ணீரில் விழுந்தனர். அப்போது பின்னால் வந்த ஒரு படகில் 6 பேர் ஏறிக்கொண்டனர். ஆனால் கடலூர் முதுநகர் அருகே உள்ள சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த நாராயணசாமி மகன் மாணிக்க சாமி(60) நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் பின்னர் மற்ற மீனவர்கள் மாணிக்க சாமியின் உடலை மீட்டு படகு மூலம் நேற்று சிங்காரத்தோப்பு பகுதிக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் துறைமுகம் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சிங்காரத்தோப்பு பகுதிக்கு சென்று மாணிக்க சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.