Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தஞ்சையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்: குருவை தொகுப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வேண்டும்

தஞ்சாவூர், ஜூலை 23: தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தஞ்சை கோட்டாட்சியர் இலக்கியா தலைமை தாங்கினார். இதில் தஞ்சை பூதலூர் திருவையாறு திருக்காட்டுப்பள்ளி ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மனு அளித்தனர்.

ஜீவகுமார்:

உய்யக்கொண்டான் கட்டளை வாய்க்காலில் இதுவரை தண்ணீர் வரவில்லை. எனவே தண்ணீர் திறக்கும் தேதியை அறிவிக்க வேண்டும். குத்தகை விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைப்பதில்லை. எனவே அவர்களுக்கும் பயிர் காப்பீடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். பயிர் இன்சூரன்ஸ் காப்பீட்டை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும். தஞ்சை மாவட்டம் பாளையப்பட்டி பகுதி கீழடி அகழ்வாய்வுக்கு இணையாக உள்ளது. அங்கு பல்வேறு தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி சுமார் 52 ஏக்கர் அளவு உள்ளது. எனவே அதனை மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை மூலம் கையகப்படுத்தி அங்கு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். தஞ்சை கல்லணை பகுதியில் கொள்ளிடம் ஆறு கடயகுடி பகுதியில் இதுவரை தண்ணீர் இல்லாமல் உள்ளது. எனவே அதில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவிச்சந்தர்:

குருவைத் தொகுப்பு திட்டத்தில் பயனாளிகளை கூடுதலாகி விண்ணப்பிக்க கால நீட்டிக்கு வழங்க வேண்டும். குருவை தொகுப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க ஜூலை மாதம் 31ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கு கால அவகாசம் தரவேண்டும். தஞ்சை மாவட்டத்தில் கிளை வாய்க்கால்களில் இன்னும் தண்ணீர் செல்லாத நிலையில் ஆலக்குடி, சித்திரக்குடி கள்ளப்பெரும்பூர் போன்ற பல இடங்களில் நடவு எண்ணிக்கை நான்கில் ஒரு பங்காக குறைந்தது. தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் காய்கறி வார சந்தை பல இடங்களில் நடைபெற்று வந்தது. தற்போது ஜோதி நகர் மற்றும் முனிசிபல் காலனி கல்யாண நகர் டி பி எஸ் நகர் போன்ற பல இடங்களில் காய்கறி வார சந்தை நடப்பது மாநகராட்சி தடை செய்து வருகிறது. மேலும் வாரச்சந்தை நடத்துபவர்களிடம் அதிகபட்ச தொகையை கேட்டு மாநகராட்சி ஊழியர்கள் தொந்தரவு செய்கிறார்கள். தமிழ்நாடு அரசு தனி வேளாண் நிதிநிலை அறிக்கையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களுக்கு சிலை மணிமண்டபம் அமைக்கப்படும் என அமைச்சர் அறிவித்திருந்தார். எனவே நம்மாழ்வார் வாழ்ந்த கல்லணை கரையில் அவருக்கு திருவுரவ சிலை மணிமண்டபம் அமைக்க வேண்டும்.

கோவிந்தராஜ்:

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற போகிற விவசாயிகளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடன் இல்லை என்று சான்று வாங்கி வாருங்கள் என கூறுவது ஏற்படுவது இல்லை. எனவே உடனே இதை கைவிட்டு பழைய நடைமுறையை தொடர வேண்டும். விவசாயத்திற்கு மின் இணைப்பு வேண்டி தயார் நிலை பதிவு செய்து மின்கம்பங்கள் நட்பு மின் ஒயர்கள் இழுத்து சப்ளை மட்டும் கொடுக்காமல் உத்தரவு வரவில்லை என அதிகாரிகள் கூறுகிறார்கள். எனவே அதனை தவிர்த்து விரைவில் சப்ளை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குருவை பயிர்காப்பீடு செய்ய உள்ள விவசாயிகளுக்கு சொந்த நிலமாக இருந்தால் தான் காப்பீடு செய்ய முடியும். குத்தகை நிலமாக இருந்தால் காப்பீடு செய்ய முடியாது என்பதை ஏற்க முடியாது. எனவே அந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டும்.

அறிவழகன்:

தமிழ்நாடு வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் வழங்க மற்றும் புதுப்பிக்க சிபில் ரிப்போர்ட், ரெக்கார்ட் என்ஓசி, போன்ற ஆவணங்களை கேட்பதை தவிர்த்து பழைய நடைமுறையை கடைபிடிக்க வேண்டும். திருவையாறு பகுதியில் துணை வேளாண் விற்பனை கூடம் உழவர் சந்தை அமைக்க வேண்டும். வாழை விவசாயிகள் பயனடையும் வகையில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழியை ஒழித்து உணவகங்களில் வாழை இலை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினார்.

இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய் தறை அதிகாரிகள், நுகர்வோர் வாணிப கழக நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.