புளியங்குடி,ஜூன் 26: புளியங்குடி இந்திரா காலனியை சேர்ந்தவர் சமுத்திரபாண்டி (62). விவசாயி. இவருக்கு பவுனுதாய் (55) என்ற மனைவியும், மாரித்துரை என்ற மகனும் உள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு சமுத்திரபாண்டி தனது மகன் மாரித்துரையுடன் பைக்கில் புளியங்குடி பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்து நிலையம் அருகே கோவில்பட்டியில் இருந்து புளியங்குடி வந்த தனியார் பஸ் எதிர்பாராவிதமாக பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த சமுத்திரபாண்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவிக்கு பிறகு மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவரான கோவில்பட்டி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையை சேர்ந்த அய்யாதுரை மகன் சிவக்குமார் (42) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.