ஈரோடு, அக். 30: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கும், தொட்டிபாளையம் ரயில்வே ஸ்டேஷனுக்கும் இடைப்பட்ட ரங்கம்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் 60 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் தலை, கை, கால்களில் பலத்த ரத்த காயங்களுடன் கிடப்பதாக தகவல் வந்தது. அதன்பேரில், ஈரோடு ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மூதாட்டி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். மூதாட்டி தண்டவாளத்தை கவனக்குறைவாக கடந்தபோது, அவ்வழியாக வந்த ரயில் மோதி இறந்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, இறந்த மூதாட்டி யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் குறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மூதாட்டி மஞ்சள்ஆரஞ்சு பூ போட்ட சேலை, சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்து இருந்தார் என போலீசார் தெரிவித்தனர்.
