ஈரோடு, அக். 30: ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற உள்ள சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியில் 22 வட்டார கல்வி அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணி வருகிற நவம்பர் மாதம் 4ம் தேதி தொடங்கி, டிசம்பர் மாதம் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், வாக்குச்சாவடி அதிகாரிகள் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு படிவத்தை கொடுப்பர். அதை நிரப்பி பொதுமக்கள் திருப்பி தர வேண்டும்.
டிசம்பர் 9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலும், பிப்ரவரி மாதம் 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 14 வட்டாரங்களிலும் உள்ள வட்டார கல்வி அலுவலர்கள் 22 பேர் இப்பணியில் ஈடுபட உள்ளனர். தினமும் கல்வி வளர்ச்சி பணியுடன் சேர்ந்து வாக்காளர் திருத்த பணிகளையும் மேற்கொள்வர். இதற்கென தனியாக நேரம் ஒதுக்கப்படவில்லை. மேலும், இந்த பணியில் வட்டார கல்வி அலுவலர்களுக்கு உதவியாக அங்கன்வாடி பணியாளர்களும் ஈடுபட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
