ஈரோடு, ஆக. 27: ஈரோடு பெரியசேமூரைச் சேர்ந்தவர் மகேந்திரன் (46). தறிப்பட்டறை தொழிலாளியான அவருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் சரிவர வேலைக்கு போகாமல், கடன் வாங்கி மது அருந்தி வந்துள்ளார். உறவினர்கள் அறிவுரை கூறியும், மகேந்திரன் கேட்கவில்லை.
இந்நிலையில், கடந்த 20ம் தேதி மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி, தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட உறவினர்கள், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மகேந்திரன் நேற்று உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி சசிகலா அளித்த புகாரின் பேரில், ஈரோடு வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.