ஈரோடு, ஆக.27: ஈரோடு அருகே சாலை விபத்தில் ஏடிஎஸ்பி ஜீப் டிரைவர் படுகாயம் அடைந்தார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை துடுப்பதி சுள்ளிபாளையத்தை சேர்ந்த வேலுமணி மகன் சஞ்சீவ் (32). ஆயுதப்படை போலீஸ். ஈரோடு மாவட்ட போலீஸ் ஏடிஎஸ்பி ஜீப் டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 23ம் தேதி இரவு பணி முடிந்து, சங்சீவ், வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். ஈரோடு அடுத்த வேப்பம்பாளையம் அருகே சென்றபோது, முன்னாள் சென்ற சரக்கு ஆட்டோ சாலையின் நடுவே உள்ள கான்கிரீட் தடுப்பில் (சென்டர் மீடியன்) மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சென்டர் மீடியன் சற்று விலகியதால், பின்னால் வந்த சஞ்சீவ் அந்த கான்கிரீட் தடுப்பில் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், சஞ்சீவ்விற்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் சஞ்சீவை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி, சரக்கு ஆட்டோ ஓட்டுனரான ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த சுபாஷ் (42) மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.