அந்தியூர்,செப்.26:அந்தியூர் அருகே உள்ளது மைக்கேல்பாளையம். இங்குள்ள பொய்யேரிக்கரை கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பயன்படுத்தும் மயானத்திற்கு செல்லும் வழி பாதை அரசு புறம்போக்கு நிலமாகும். இதனை தனியார் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகிறார். நீதிமன்ற உத்தரவை மீறி இவருக்கு ஆதரவாக வருவாய்துறையினர் செயல்படுகின்றனர் என மக்கள் குற்றம் சாட்டினர்.
எனவே ஆக்கிரமிப்பை அகற்றவும், ஆதரவு வருவாய் துறையினர் மீது நடவடிக்கை எடுகக்வும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் முருகேசன் தலைமையில்,50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் ஈரோடு கலெக்டர் அலுவலகம் சென்று மாவட்ட வருவாய் துறை அலுவலர் சாந்தகுமாரிடம் தங்கள் கோரிக்கை மனுவினை அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அப்பகுதி மக்களிடம் உறுதி அளித்தார்.