சத்தியமங்கலம், ஆக. 22: சத்தியமங்கலம் அருகே மாரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தாமணி (54). இவர், அதே ஊரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் அங்கன்வாடி மையத்தில் வசந்தாமணி பணியில் இருந்தபோது அங்கு வந்த அதே ஊரைச்சேர்ந்த சின்னசாமி(60) தனது பேத்தியை அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார்.
அப்போது வசந்தாமணி சின்னச்சாமியின் மகளுக்கு போன் செய்து குழந்தையை அனுப்பி வைக்கவா என கேட்டதால் ஆத்திரமடைந்த சின்னசாமி, வசந்தாமணியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், வசந்தாமணிக்கு சிராய்ப்பு காயம் ஏற்பட்டதால் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வசந்தாமணி சின்னச்சாமி மீது சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் சின்னச்சாமியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணியில் இருந்த அங்கன்வாடி பணியாளரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.