ஈரோடு, நவ.21: கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத்தலைவரும், தென்னக ரயில்வே ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினருமான கே.என்.பாஷா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒன்றிய பாசிச பாஜ அரசு தொடர்ந்து, ஜிஎஸ்டி வரி நிதி, மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை வழங்காததுடன் தற்போது கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களையும் நிராகரித்துள்ளது. அதற்கு காரணமாக, மக்கள் தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாசிச பாஜ மோடி அரசு, பாஜ கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு முன்னுரிமை கொடுத்து,
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணித்து வரும் இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இப்படி தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணித்து வரும் பாசிச பாஜ மோடி அரசைக் கண்டித்து, அடுத்த வாரம் ஈரோடு ரயில் நிலையம் எதிரில், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக, அதன் தலைவர் திருச்செல்வம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


