ஈரோடு, ஆக.20: ஈரோட்டில் வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்கிழமை மாலை வரை ஜவுளி வாரச்சந்தை கூடுவது வழக்கம். தென்னிந்தியாவில் புகழ்பெற்ற இந்த ஈரோடு ஜவுளி வார சந்தையில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து துணிகளை வாங்கி செல்வார்கள்.
அந்த வகையில், அசோகபுரம், ஈரோடு காந்திஜி ரோடு, ஸ்டேட் வங்கி ரோடு, சென்ட்ரல் தியேட்டர் ஆகிய பகுதிகளில் வாரச்சந்தை நேற்று முன்தினம் இரவு கூடியது. இதில், ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் கடைகளை அமைத்திருந்தனர். அடுத்த மாதம் செப்.5ம் தேதி, கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதனால், கேரள மாநில ஜவுளி வியாபாரிகள் அதிகளவில், ஈரோடு ஜவுளிச்சந்தைக்கு வந்திருந்தனர். இந்த வியாபாரிகள், கேரள மக்கள் பாரம்பரியமாக அணியும் செட் முண்டு, பட்டு ஜரிகை சேலை, அங்கவஸ்திரம், மஞ்சள் கரை போட்ட வேட்டி, துண்டு போன்ற ஜவுளி ரகங்களை அதிகளவில் வாங்கி சென்றனர். ஓணம் பண்டிகை நெருங்குவதால் வியாபாரிகள் போட்டி போட்டு துணிகளை வாங்கிச்சென்றனர். கேரள வியாபாரிகள் வருகையால் ஈரோடு ஜவுளிச்சந்தை களை கட்டியது.