ஈரோடு, செப். 19: ஈரோடு மாநகரில் கனமழை பெய்ததை தொடர்ந்து, டெங்கு தடுப்பு நடவடிக்கையாக, கொசுமருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் மதியம் கனமழை பெய்தது. இதனால் மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில இடங்களில் சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் மழைநீருடன் கழிவுநீர் சென்றது. மேலும், குடியிருப்பு பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி குட்டைபோல் காட்சியளித்தது.
இதனையடுத்து, சாலை மற்றும் குடியிருப்புகளில் தேங்கிநிற்கும் நீரை அகற்றவும், நீர் தேங்கிய இடங்களில் கொசு மருந்து அடிக்கவும், மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. தொடர்ந்து, மாநகராட்சிக்கு உட்பட்ட நீர் தேங்கிய இடங்களில், கொசு மருந்து அடிக்கும் பணியில், கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவை தவிர, கால்வாய் அடைப்பு ஏற்பட்ட இடங்களில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.